தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் (கங்கைக் குளியல்)
தீபாவளி சிறப்புப் பதிவு
நம் மச்ச முனிவரின் சித்த ஞான சபையின் வலைத்தள வாசக அன்பர்களுக்கு பேரன்புடைய சித்தர்களின் இறையருள் மிகக்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நாம் நமது பழந்தமிழர் பழக்க வழக்கங்களில் மிக முக்கியமான விடயங்களை விட்டு விட்டோம். அவையாவன
1) ஒரு நாளைக்கு இரு முறை (மலம் கழித்தல்)
2) ஒரு வாரத்துக்கு இரு முறை (எண்ணெய் தேய்த்துக் குளித்தல்)
3)ஒரு மாதத்துக்கு இரு முறை (உடலுறவு வைத்துக் கொள்ளல்)
4)ஒரு வருடத்துக்கு இரு முறை (பேதிக்கு மருந்து சாப்பிடுதல்)
இப்படி வாரத்துக்கு இரு முறை குளிக்க வேண்டிய எண்ணெய்க் குளியலை வருடத்துக்கு ஒரு முறை குளிக்கிறோம்.எண்ணெய் என்பதற்கே பொருள் எள் + நெய் என்று பொருள் . அதையே நல்ல என்ற அடை மொழியோடு அழைப்பதால் அதன் சிறப்பை உணரலாம். ”வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்கு கொடு ”என்பார்கள். அதாவது நல்ல பொருட்களை வாணிகனிடம் இருந்து வாங்கி உபயோகிக்காமல் வியாதிகளை உண்டாக்கிக் கொண்டு வைத்தியனிடம் போய் மருந்துகளுக்காக பொருள் செலவிட வேண்டாம் என்று பொருள்.
நல்லெண்ணெய் கடையில் வாங்கி உபயோகிக்காதீர்கள் . அதில் மினெரல் எண்ணெய் கலக்கப்படுகிறது.எள் 20 கிலோ வாங்கி நான்கு நாள் அதன் தண்ணீர்ச் சத்து குறையும் வரை வெய்யிலில் வைத்து , பின் ஒரு கிலோ கருப்பட்டியுடன் மரச் செக்கில் (இயந்திரச் செக்கிலேயே மரச் செக்கு இருக்கிறது ) ஆட்டி எடுத்தால் , பத்து லிட்டர் எண்ணெய் கிடைக்கும். இதைக் குளிக்கவும் , சமையலுக்கும் பயன்படுத்தினால் மிக்க நலம் கிடைக்கும்.
ஆண்கள் புதன் கிழமையும் சனி கிழமையும் , பெண்கள் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக் கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். முதலில் நல்லெண்ணெயில் சில மிளகு , சீரகம் ,வெள்ளைப் பூண்டு , சின்ன வெங்காயம் , ஒரு உடைக்காத மிளகாய் இவற்றைப் போட்டு புகையாமல் காய்ச்சி , உடலெங்கும் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து , அதன் மேல் (கடலை மாவு + பச்சைக் கற்பூரம் + இரு எலுமிச்சம் பழச்சாறு அரை மணி நேரம் ஊற வைத்ததை ) தேய்த்து கால் மணி நேரம் காய விட்டுப் பின் இதமான வெந்நீரில் குளிக்க மிக்க சுகமாக இருக்கும்.
இதன் பின்னர் பால் சாம்பிராணி அல்லது சிங்கப்பூர் சாம்பிராணி, காய வைத்த துளசி இலை , நிலவேம்புக் குடிநீருக்காக உபயோகிக்கும் பொடி இவற்றைத் தணலில் போட்டுப் புகை பிடிக்க எந்த நோயும் அண்டாது.
எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாதவர்கள் பாக்கு மட்டைத் தட்டில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கால்களை வைத்து உட்கார்ந்து இருக்க , அரை மணி நேரத்தில் கண்ணில் எண்ணெய் விட்டது போல பசபசப்புத் தட்டும் , அத்துடன் காலை எடுத்துவிட்டுத் துடைத்துவிடவும். இதுவும் எண்ணெய்க் குளியலின் பயனைக் கொடுக்கும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று , வெய்யிலில் அலையக் கூடாது , உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது ,உறங்கக் கூடாது, லாகிரி வஸ்துக்களை (பொடி , புகையிலை , வெற்றிலை பாக்கு, சாராயம்)புசிக்கக்கூடாது,காரமான உணவுப் பொருட்களையும் , மாமிசமும் புசிக்கக் (உண்ணக் ) கூடாது.
நோயணுகா விதிகள் பற்றி தேரையர் கூறுவதைக் கேளுங்கள்.
பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்;
பகலில் புணரோம்; பகலில் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;
இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையிற்படுப்போம்;
மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர் உண்போம்;
முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்;
ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்;
நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்;
கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;
விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;
பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்;
படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;
சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை;
வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;
நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே.
இதன் பொருள்
நாட்டு மாட்டின் பாலுணவை உண்போம்.
நல்ல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.
பகலில் உடலுறவு கொள்ள மாட்டோம்.
தன் வயதை விட மூத்த பெண்ணோடும், பொது மகளிரோடும் உடலுறவு கொள்ளமாட்டோம்.
காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.
மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்க மாட்டோம்.
படுக்கும் பொழுது இடது கைப்புறம் ஒருக்களித்துப் படுப்போம். அப்போதுதான் வலப்புறம் சூரிய கலையில் மூச்சு ஓடும்.அது பன்னிரண்டங்குலம் ஓடுவதால் மூச்சு விரயம் ஆகாது .உடலும் கஷ்டப்படாது .
நன்றாக நாள்பட்ட ( மூத்த )புளித்த தயிர் உணவை விரும்பி உண்போம்.
முதல் நாள் சமைத்த கறியை அடுத்த நாள் உண்ணமாட்டோம்.
பசிக்காதபோது உண்ண மாட்டோம். பசித்தபொழுது மட்டும் உண்போம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உண்போம்.ஒரு போது உண்பவன் யோகி, இரு போதுண்பவன் போகி , முப்போதுண்பவன் ரோகி(வியாதியுள்ளவன்), நான்கு போதுண்பவன் துரோகி ( உடலுக்கு துரோகம் செய்பவன் ).
பகலில் தூங்க மாட்டோம், இரவில் நன்றாகத் தூங்குவோம்.
மாதம் ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வோம்.
மண்ணில் விளையும் கிழங்குகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்குகளைப் புசிக்க மாட்டோம்.
உணவு உண்ணும்பொழுது தாகம் அதிகரித்தாலும் இடையில் நீர் அருந்த மாட்டோம்.
பிஞ்சு வாழைக்காய்களையே கறி சமைத்து உண்போம். மிக முற்றிய காய்களை உண்ண மாட்டோம்.
உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்போம்.
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்வோம்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு ( நசியம் ) மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.
வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.
நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.
மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.
ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.
தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.
இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.
பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.
அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.
நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.
பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.
இவற்றில் கூறியுள்ளவாறு நம் வாழ்வில் கடைபிடித்தால் எமன் நம்மிடம் வர அஞ்சுவான். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.
நல்ல(எண்ணை)தகவல்.. எண்ணெய் தேய்த்து குளிக்க இயலாதவர்கள் பாக்கு மட்டைத் தட்டில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கால்களை வைத்து உட்கார்ந்து இருக்க , இதுவும் எண்ணெய்க் குளியலின் பயனைக் கொடுக்கும் என, எண்ணை தேய்த்துக் குளிக்க இயலாதவர்களுக்கு பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள். பாக்கு மட்டைத்தட்டில் நல்லெண்ணையை பாதம் நனையும் அளவிற்கு ஊற்றினால் போதுமா அல்லது எந்த அளவிற்கு ஊற்ற வேண்டும் என்ற விவரத்தினையும், அதே எண்ணையை மீண்டும் அடுத்த முறை அதே காரியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்ற விவரத்தினையும் தெரிவித்தீர்களானால் இந்த பயனுள்ள தகவலை பின்பற்றி நலம் பெறுவோம். -ரவி,ஈரோடு.
அன்பின் திரு.சாமீ அழகப்பன் அவர்களுக்கு…வணக்கம் !
அருமையான கட்டுரை. ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டிய பதிவு. இதுபோல் இன்னும் நிறைய பதிவுகளை தரவேண்டுகிறோம்.
வாழ்க வளமுடன் !
அருமை ஐயா.ஐயா தாங்கள் பாச் மலர்மருத்துவம் மற்றும் தமிழ் மலர் மருத்துவம் பற்றி எழுதினால் சிறப்பாக இருக்கும் .
நன்றி