சித்தர்களின் ரசமணி ரகசியங்கள்

எனது அம்மாவின் தாத்தா திரு மிகு புளுகாண்டியா பிள்ளை என்ற சாந்தலிங்கம்பிள்ளை ,அவரின் அப்பா அழகப்ப பிள்ளை ஆகிய அனைவருமே பரம்பரை வைத்தியர்களே!
இவர்களின் பரம்பரையில் வந்ததாலோ என்னவோ இந்த சித்த வைத்திய முறைகளை எனது மாமா சற்குரு அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயா அவர்களின் திருக்கடாட்சத்தால் மூலிகைகள் ,மருந்துகள் பற்றிய விவரங்களும் அவைகளை முடிக்கும் விதம் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு.நான் எனது தாத்தாவின் ஒரு கையெழுத்துப் பிரதியைப் பார்த்து அதில் வர்மம் பற்றிய குறிப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு,அதை கராத்தே குங்பூ போன்று அதை அடுத்தவர்களை உதைக்க பயன்படுத்தலாம் என்று எண்ணி,அதை முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றுதான்,முதன்முதலில் எனது மாமா அருட்திரு மிகு பார்த்த சாரதி ஐயாவைக் கேட்டேன். ஆனால் அவரோ கைநாடி பார்க்க தெரியாமல் வர்மம் கற்றுக் கொண்டால் பயன் இல்லை என்று கூறி என்னை,வேறு பாதையில் திருப்பி கொஞ்சம் ,கொஞ்சமாக நாடி பார்க்க கற்க வைத்து,வைத்தியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்க வைத்தார்.

பின்னாளில் நான் வர்மம் பற்றி அறிந்து கொண்ட பின்( எனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின் நான் இனி யாரையும் கைநீட்டி அடிக்க மாட்டேன் என்று தெளிவாய்த் தெரிந்த பின்னரே கீழ்க்கண்ட விதிமுறைகளுடன் கூடிய சத்தியத்தையும் வாங்கிக் கொண்ட பின்னரே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள்.
1) உயிருக்கு ஆபத்தான சமயந் தவிர வேறு சமயங்களில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்கக் கூடாது, என்றும்
2)கற்றுக்கொடுத்த குருநாதருக்கு எதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
3) கற்றுக்கொடுத்த குருநாதரின் வாரிசுகளுக்குஎதிராக எந்தச் சூழ்நிலையிலும் இந்தக் கலையை பிரயோகம் செய்யக்கூடாது , என்றும் .
4) கற்றுக்கொடுத்த குருநாதர் உயிருடன் இருக்கும் வரை ,இதை யாருக்கும் நான் கற்றுக் கொடுக்கக் கூடாது ,என்றும்.
5)உயிருக்கு ஆபத்தான சமயத்தில் இந்த வர்மக் கலையை பிறருக்கு எதிராக பிரயோகிக்க நேர்ந்தாலும் அவர்களை அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும், என்றும்.வர்மத் தாக்குதலுக்கு இயற்கையாலோ செயற்கையாலோ, ஆளாகி இருக்கும் ஒருவனை இறக்கும்படி விட்டுவிடக்கூடாதுஅவர்களையும் அடங்கல் முறைகளைக் கொண்டு தட்டி எழுப்பிவிட வேண்டும்.என்றும்.
6)வர்மம் என்றாலே கர்மம் .அவை இறைவன் போட்டு வைத்த மர்ம முடிச்சுக்கள், எனவே எந்த வர்மத்தையாவது வர்மம் கற்றவன் தாக்குதலுக்குப் பயன்படுத்தினால் அதே வர்மத்தால் அவனுக்கு மரணம் நேரும், என்றும்.
7)வர்மத்தின் நல்ல பிரயோகங்களை அவத்தைப் படுபவர்களுக்கு பொருள் வாங்காது பிரயோகம் செய்ய வேண்டும் ,என்றும்.
பால் வைத்து சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுத்தார்கள்.

நான் எதற்காக வர்மம் கற்க நினைத்தேனோ அந்த நோக்கம் பின்னாளில் , மறைந்து துன்பப்படும் நோயாளிகளுக்கான வைத்தியத்திற்கான பிரயோகமாக அது மாறியது.

சரி இப்போது ரசமணி ,ரச மணி என்று சொல்கிறார்களே அது எது,எதற்கெல்லாம் பயன் பெறும்.எப்படி செய்வது என்பதை ஒளிவு மறைவு இல்லாமல் எனது தாத்தாவின் ஏட்டுப்பிரதியில் இருப்பதை அப்படியே ஒளி நகலாகத் தருகிறேன்.

இந்த ஏட்டுப் பிரதி எழுத்துக்கள் புரியாது எனபதால் அதில் கொடுத்துள்ள விஷயங்களை அப்படியே தருகிறேன்.கருவூமத்தை வேரைக் கொண்டு வந்து
பெரிய துவாரம் போட்டு கால் பலம் வாலை ரசம் (ஒரு பலம் என்பது 35 கிராம்)
விட்டு (அதில் குடைந்து எடுத்த) நடு வேரைக் கொண்டு மூடி ஏழு சீலை மண் செய்து(ஒரு சீலை மண் என்பது பருத்திக் காடாத் துணியில் களிமண் பூசி அதை மேற்படி வேரின் மேல் சுற்ற வேண்டும் ,இப்படி ஏழு தடவை சுற்ற வேண்டும்) கோழிப் புடம்போட தம்பனமாகும்(தம்பனம் என்றால் ஓடாமல் ரசம் கெட்டிப்படுதல்).(கோழி உட்கார்ந்து இருந்தால்  எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு உயரம் மாட்டுச் சாண எரு அடுக்கி புடமிடுதல்).அப்படி மூணு புடமிட கட்டிப்படும்.
அதை கையில் எடுத்து முள் முருங்கையிலை இரண்டு எடுத்து,இரண்டு பணவெடை மயில் துத்தம் பொடிசெய்து இலைக்குள் வைத்து பொட்டலம் கட்டி புதுச்சட்டியில் (புது மண்சட்டி) மேலே கட்டின ரசத்தை விட்டு கொதிக்கிற தண்ணீர் விட்டு பொட்டணங்கொண்டு நாலு நாழிகை எரித்தெடுக்க ரசமணியாகும்.அதை ஆறும் முன்பு ஊசியால் குத்தி கோர்த்து எடுத்து கட்டிக்கொள்ளலாம்.

எனக்கு தங்கள் விமரிசனங்களையோ,தங்கள் கருத்துக்களையோ எனக்குத் தெரிவித்தால், நன்றி நண்பர்களே!
பின்னொரு சமயம் வேறோர் விஷயத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்