தீபாவளி ஸ்பெசல்(பாகம் 3)

தீபாவளி அன்று வெடி போடுவது மட்டும் நமக்குத் தெரியும்.கார்த்திகை அன்று வெடி போடுவதும் உங்களுக்கு தெரியும்.தெரியாதது நம் பழந்தமிழர் வாழ்வியலை சித்தர் விஞ்ஞானம் எப்படி வடிவமைத்துள்ளது என்ற ரகசியம்,இந்த பதிவை படித்தால் உங்களுக்கு புரியும்.

ஐப்பசி கார்த்திகை அடை மழை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.ஆனால் இந்த மழை எப்படி உண்டாகிறது தெரியுமா?வட கிழக்குப் பருவக்காற்று அடிப்பதால் கடலில் இருந்து எடுத்து வரப்படும் நீர் மழையாகப் பொழிகிறது தமிழ்நாட்டில்.ஆனால் தமிழ் நாட்டுக்குள் காற்றை சூடாக்கினால்தான் அந்த மழை இங்கே இழுக்கப்பட்டு மழை நமக்குப் பெய்யும்.எனவே காற்றை சூடாக்கி செயற்கையாக ஒரு வெற்றிடத்தை( DEPRESSION ) உருவாக்குகிறார்கள்.
இல்லை என்றால் வடகிழக்கு பருவக்காற்று அடிக்கும் போது அடிக்கடி  கடலில் ஏற்படும் வெற்றிடம் ( DEPRESSION ) கடும் சூறாவளியையும் புயல் காற்றையும்தான் கொண்டு வரும்.எனவே வீட்டுக்கொரு விளக்கு ஏற்றினாலே காற்று சூடாக்கப்படும்.

வீட்டுக்கொரு தீப ஆவளி (தீபங்களின் வரிசை) ஏற்றப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள காற்று சூடாக்கப்படும்.அது மட்டுமல்ல திருக்கழுக்குன்றம் , திருவண்ணாமலை,சுவாமி மலை, திருப்பரங்குன்றம், என உயரமான மலைகளில் போடப்படும் பெரும் தீபங்களும் காற்றை சூடாக்கும் பணியை நன்கு செய்கின்றன.

இரண்டு வெற்றிடங்கள் உருவாக்கப்படும் போது அவை இரண்டின் சந்திப்பு கடற்கரையருகே நடைபெற்று முடிவு மழை மட்டும் நமக்கு கிடைத்து பெருங்காற்று(சூறாவளி புயல் ) தவிர்க்கப்படும் . இதனால் விவசாயிகளுக்குப் பெருமக்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சேதமும் தவிர்க்கப்பட்டு , சாதாரண மக்களின் ஓலைக் குடிசைகளும் பாதுகாக்கப்பட்டன.இந்த விஞ்ஞானம் தொடருமானால் தமிழர் வாழ்வும்,விவசாய வளமும் பாதுகாக்கப்படும்.
இது மட்டுமல்ல காற்று குளிரும் போதுதான் கிருமிப் பரவல் அதிகரிக்கும். காற்று சூடாக்கப்படுவதோடு காற்றில் கலக்கும் கந்தகப்புகையும்உஷ்ணமும் காற்றில் கலந்து நிற்கும் கிருமிகளைக் கொல்கிறது.எனவே கொள்ளை நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது.
இத்தோடு பழந்தமிழர் வாழ்வியலில் சிவன் கோவில்களில் குங்கிலியத்தைப் புகை போடுவது வழக்கமாக இருந்தது.இதுவும் கிருமிகளைக் கொல்வதற்கும் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கும் மிக உறு துணையாக இருந்தது.இந்த வழக்கம் ஒழிந்து போனது துரதிருஷ்டவசமானதே.

வீட்டிலும் குங்கிலியத்தைப் புகை போடலாம். குங்கிலியத்தில் இரண்டு வகை  உண்டு.ஒன்று செங்குங்கிலியம், மற்றொன்று வெண்குங்கிலியம். இரண்டையுமே புகை போட உபயோகிக்கலாம்.வெண் குங்கிலியத்தை குந்திரிகம் என்றும் அழைப்பார்கள்.இது விலை அதிகம், செங்குங்கிலியம் விலை குறைவு.இதையும் புகை போட சாம்பிராணி போல உபயோகிக்கலாம். 

குங்கிலியக் கலய நாயனார் என்று ஒருவர் 63 நாயன்மார்களில் ஒருவர்.அவர் வாழ்நாள் முழுவதும் சிவன் கோவிலுக்கு குங்கிலியம் வாங்கித் தருவதையே தன் வாழ்நாள் கடமையாக கொண்டு ஒழுகி வந்தார்.
அவர் வீட்டில் கடும் வறுமையால் வீட்டில் உள்ள அனைவரும் பட்டினியாய், இருந்த சூழ்நிலையில் அவர் மனைவி தனது பொன் தாலியைக் கழற்றிக் கொடுத்து அதற்கு ஈடாக, வீட்டுக்கான உணவுப் பொருள்களை வாங்கி வரக் கூறி அனுப்பினார்.
அவர் இந்த உணவுப் பொருள்கள் வாங்கும் காரியத்திற்காக போகும் வழியில், ஒரு குங்கிலியம் விற்பவரை பார்த்தார்.அவர் விற்பதற்காக வைத்திருந்த குங்கிலியம் தரமானதாகவும்,ஒரு வருடத்திற்கு சிவன் கோவில் பூஜைக் கைங்கரியத்திற்கு தகுந்ததாகவும் இருப்பதைப் பார்த்தார்.
உடனே அதை இந்தத் தாலிப் பொன்னுக்கு ஈடாக இந்தக் குங்கிலியத்தைக் கொடுப்பீர்களாஎன்று கேட்டு அதை வாங்கிக் கொண்டு சிவன் கோவிலுக்குச் சென்று குங்கிலியம் கொடுக்கும் கடமையைச் செலுத்திய பின்தான் குடும்பத்தினர் பட்டினியாக இருப்பது ஞாபகத்திற்கு வந்தது .
இப்படி தன்னலமில்லாமல் பிறர் நலம் பேணி கோவிலில் கடமையாற்றியதற்காக சிவன் காட்சி அளித்து தன் சிவ பக்தர்களில் தலையாய பக்தர்களில் (63 நாயன்மார்களில்) ஒருவராக பதவி தந்து நல்வாழ்வையும் அருளினார்.
இப்படி சித்தர்களும், சிவ பக்தி செய்யும் முக்தர்களும் பொதுவான மக்களின் வாழ்க்கைக்கு நேரடியாகவும், மறைமுகவாகவும் உதவி வந்துள்ளார்கள்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்

சாமீ அழகப்பன்