சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(5)

மனம் என்பது பொறிகளின் வழியே புலன்களை இயக்கி உயிரானது இந்த உலகத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு கருவியே.உயிரின் கருவிகளான முக்கியுடற் தத்துவங்கள் 96 ல் அந்தக்கரணங்கள் 4 ம் முக்கியமானவை.

ஆன்மாவின் அனுபவத் தேடலின் ஒரு பகுதியே இது.

இதில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள். எத்தனை இன்பம் என நினைக்கிறோம்.எத்தனை துன்பம் என நினைக்கிறோம்.இவை அனைத்தும் மாயையே!இவற்றை ஆன்மாவின் கருவிகளாய் இருந்து நிகழ்த்துபவையே அந்தக்கரணங்கள்.

இருட்டான,சப்தமில்லாத,ருசி,வாசனைகள்,தொடுதல் அற்ற உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!அப்போது உங்களுக்கு இந்த உலகத்தை புலப்படச் செய்வதால்தான் கண், செவி, வாய், மூக்கு, மெய்) இவற்றுக்கு புலன்கள் என்று பெயர்.

மனம் இல்லையேல் பொறிகளில் இயங்கும் புலன்கள் இல்லை.புலன்கள் இல்லையேல் உலகம் நம்மால் உணரப்படுவது இல்லை.எனில் உலகம் என்பது நம் குறைபட்ட புலன்கள் வழியே உணரப்படுவதே.

அந்தக் கரணங்கள் நான்கும் மனம்,சித்தம்,புத்தி, அகங்காரம் என்பன. மனம் என்பது கம்யூட்டரில் உள்ள ப்ராசஸ்சர்(PROCESSOR) போன்றது.புத்தி என்பது கம்யூட்டரில் உள்ள மெமரி(MEMORY)போன்றது.சித்தம் என்பது கம்யூட்டரில் உள்ள ஓஎஸ்(OPERATING SYSTEM).அகங்காரம் என்பது ஆன்மாவின் முகவரியைப்(I.P ADDRESS) போன்றது.

இதில் மனத்தை மட்டும் வைத்து புத்தி நிலைக்கே செல்ல இயலாது.புத்தியில் உள்ளதை மனது போய் பார்த்து அடுத்த செயல்களை தீர்மானிக்க,சித்தம் அகங்காரத்தின் துணை வேண்டும்.

மனதை மட்டும் வைத்து இயங்கும் நிலை மனிதன் நிலை.சித்தத்தின் வாயிலாக காரியம் ஆற்றத் துவங்கும் போதுதான் மனிதன் சித்தர் ஆகிறார்.அகங்காரம் என்பது சிற்றுயிர் பேருயிராக பரிணமிக்க கொடுக்கப்பட்டிருப்பது,இதுவே பின்னர் ஆன்மீகத்தில் மேல் நிலை அடைய தடையாக அமைவது.

புத்தி என்பது இது வரை இந்தப் பிறவியில் கற்ற படிப்பறிவு, பட்டறிவு,அனுபவ அறிவு இவற்றின் தொகுதியே. படிப்பறிவு என்பது நாம் படிப்பதனால் வரும் அறிவு.பட்டறிவு என்பது நாமே அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்வதனால் வரும் அறிவு.அனுபவ அறிவு என்பது நம் அனுபவத்தாலும்,பிறர் அனுபவத்தாலும் பெறும் அறிவு.

எனவே மனம் என்பது ஞானத்திற்குப் போகும் வழி அல்ல.ஞானத்தின் நிலையும் அல்ல.உயிரின் படித்தரமும் அல்ல.

 

மனதைக் கடந்து உள்கட உள்கட,என்று உள்கடந்து சென்றால் அதுவே கடவுளைக் காணும் வழி.சொல்லப் போனால் மனமே முக்தி நிலைக்குப் போகும் வழிக்குத் தடை.தடையை கடந்தால் முக்தியே!