துத்தி (ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 1

துத்தி

குரு பார்க்க கோடி பாவம்போகும் என்பார்கள் .அதே போல அவருக்கு உகந்த மூலிகையான துத்தியும் பாவம் பல செய்து  உடல் ரீதியான வியாதிகளால் துன்புறுபவர்களுக்கும் நற்கதி நல்கும்.இது சிறுதுத்தி, பெருந்துத்தி , கருந்துத்தி , நிலத்துத்தி என நான்கு வகைப்படும்.சிறுதுத்தி மருத்துவத்தன்மையில் மேலானது.சிறுதுத்தி இலை மென்மையானதாக இருக்கும்.பெருந்துத்தி இலை தடிமனானதாக இருக்கும்.

சிறு துத்தி 1_miniசிறுதுத்தி

பெருந் துத்தி 1_miniபெருந்துத்தி

துத்தி என்ற  அற்புத மூலிகை தேவ குருவான , வியாழன்  என்றழைக்கப்படும் பிருகஸ்பதியிற்கான மூலிகை. இது உடலில் உள்ள நோய்களை களைந்து , உடலின் அழுகும் தன்மையையும் மாற்றி படிப்படியாக நோயை நீக்கும் வியதாபேதகாரியாக செயல்படுகிறது .

வியாழ நோக்கம் இல்லாவிட்டால் திருமணம் என்பதே ஒருவர் வாழ்வில் நிகழாது.சிறுநீரக மண்டலத்துக்கும், இனப்பெருக்க மற்றும் பிறப்புறுப்பு மண்டலத்துக்கு அதி தேவதை இந்த வியாழன் . இந்த வியாழ நோக்கம் இல்லாவிட்டால் நமக்கு சந்ததிகளே இராது.வியாழ நோக்கம் இல்லாதவர்கள் இந்த துத்திச்செடிக்கு வியாழ நோக்கம் இல்லாத நபரின்  பிறந்த நட்சத்திரத்தன்று மஞ்சள் கயிற்றால் காப்புக் கட்டி தண்ணீர் ஊற்றி  வேர் அறாமல் பிடுங்கி எடுத்து அதன் வேரைக் குளிசமாடிக் கட்ட வியாழன் அருள் கிடைக்கப் பெற்று திருமணம் நிகழும்.

துத்திப்பூ

துத்தி மலரை நிதம் துய்க்கின்ற  பேர்களுக்கு

மெத்த விந்து வும்பெருகும்  மெய்குளிரும் -சத்தியமே

வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்

தேயா மதி முகத்தாய் செப்பு

( குணபாடம் )

குணம் :-துத்திப் பூவால் ரத்த வாந்தியும் , காசரோகமும் நீங்கும்,சுக்கில ( விந்து ) விருத்தியும் , தேகக் குளிர்ச்சியும் உண்டாம் .

செய்கை:- ரக்தஸ்தம்பனகாரி, காமவிர்த்தினி

உபயோகிக்கும் முறை:-துத்திப் பூவைஒரு பிடி பிரமாணம் பசுவின் பாலில் போட்டு அடுப்பிலேற்றி வெந்து குழையும் பதத்தில் கடைந்து, சிறிது சர்க்கரை கூட்டிச் சாப்பிடலாம் அல்லது துவரம் பருப்பு  வெந்து வருஞ்சமயம் துத்திப் பூவைச் சுத்தமாக அலம்பிப் போட்டு வேக வைத்து உப்பிட்டு கடைந்து , தாளித்து உண்ணலாம் .இதனால் தேகத்தின் வெப்பம் அடங்கும். தாது ( விந்து ) கட்டும்.இரத்த காசம் குணப்படும்.

பதிவு மிகப் பெரியதாகப் போவதால் துத்தி(ஒரு அற்புத மஹா மூலிகை) பாகம் 2 ம் பாகத்தில் துத்தியிலை ,வெண்துத்தி , கருந்துத்தி , சிறுதுத்தி , நிலத்துத்தி , துத்தி விதை  பற்றி  துத்தி ( ஒரு அற்புத மஹா மூலிகை ) பாகம் 2 ம் பாகத்தில் தொடர்ந்து வெளிவரும் .