காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது)
**************************************************
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.
பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
பொருள்; இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றிபெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்
பொருள்: தொடர்ந்து இரு மாதங்கள் நாள் தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்.
உரை எழுதியவர்: திருப்பனந்தாள் புலவர் அய்யா.க. துரியானந்தம். அவர்கள்..
காரிய சித்தி மாலைப் பாடல்
இதன் ஆழ்ந்த உண்மைப் பொருள் விளக்கம் பெருங்குருமார்களிடம் சீடர்களாகி தெரிந்து கொள்ளலாம்.எமது மச்ச முனிவரின் சித்த ஞான சபையிலும் சீடராகி தெரிந்து கொள்ளலாம்.
நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க வேண்டும் அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும் என விநாயகர் தாள் பணிவோம் .
ஷண்முக நாதா
சங்கரி புதல்வா
ஆறுமுகனை ஈந்த அலங்காரியே
காரியம் ஜெயிக்க வந்த கணபதியே என தினமும் துதிப்போம்
அன்புள்ள திரு palaniappan அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முந்திக் கருணை இறை அருளான விக்கினம் தீர்க்கும் கணேசன் அருட்கருணை எல்லோர்க்கும் நிறையட்டும்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அண்ணா
இன்றைய உலகில் வேலை கிடைக்காமல் அவதிபடுவர்கள் எத்தனையோ பேர். வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் மேற்கண்ட விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.
உரையோடு அளித்தமைக்கு மிக்க நன்றி மற்றும் தங்களுடைய அரிய பணிக்கு.
மிக்க நன்றி
ஓம் கம் கணபதயே நம
அன்புள்ள திரு மு. பிரசன்ன குமார் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இறை அருட்கருணை எல்லோர்க்கும் நிறையட்டும்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
மிகவும் நன்றி
அன்புள்ள திரு பாரதிராஜா அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிகவும் பயனுள்ள பதிகம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி
உரையோடு அளித்தமைக்கு மிக்க நன்றி மற்றும் தங்களுடைய அரிய பணி வாழிய பல்லாண்டு
ஓம் கம் கணபதயே நம
ஓம் கம் கணபதயே நம
ஓம் கம் கணபதயே நம
ஓம் கம் கணபதயே நம
ஓம் கம் கணபதயே நம
மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம். பதிவிட்டு ஒரு வருடத்திற்கு பிறகு படிக்கும் பாக்கியம் பெற்றேன் அய்யா. தங்களின் பணி மென் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
நன்றி வணக்கம்,
இரா.சாமிராஜன்