திருவள்ளுவர் காட்டும் மருந்து

திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் கூறியிருக்கும் பத்துக் குறளும் மருந்தைப் பற்றியே இருக்காது.மருந்தைப் பற்றியே சொல்லாமல் எதற்கு மருந்து என்ற தலைப்பை திருவள்ளுவர் வைத்தார்.அவர் மருந்து அதிகாரத்தில் கூறியுள்ளபடி நடந்தால் மருந்து என்பதே தேவையில்லை என்பதால் அப்படி வைத்துள்ளார்.

மருந்து

குறள் 1)

மிகினுங் குறையினும் நோய் செய்யு நூலோர்

வளிமுதலா வெண்ணிய மூன்று.

மருத்துவ நூலோர் எண்ணி ஏற்படுத்திய (1)வளியாகிய காற்று(வாதம்)(2) வன்னி என்ற நெருப்பு(பித்தம்)(3)நீர்(சிலேற்பனம்) ஆகிய மூன்றும் கூடினாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.இது உணவின் மூலமோ அல்லது பழக்க வழக்கத்தினாலோ,அல்லது சுற்றுப்புற சூழலினாலோ பாதிக்கப்பட்டால் நோய் உண்டாகும்.

குறள் 2)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய

தற்றது போற்றி யுணின்.

உடலுக்கு பொருந்தும் உணவு எது என்றும்,பொருந்தாத உணவு எது என்றும் போற்றி உண்ணக் கூடியவருக்கு மருந்து என ஏதும் தேவையில்லை.

குறள் 3)

அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு

பெற்றா னெடிதுய்க்கு மாறு

நமக்கு எவ்வளவு உணவு தேவை.அதை நம்மால் சீரணிக்க முடியுமா?நமக்கு அது தேவையா?என்று உணர்ந்து ருசிக்குச் சாப்பிடாமல் பசிக்குச் சாப்பிடுங்கள் .அதுவே இந்த உடம்பு நெடு நாள் உயிர் வாழும் வழி.அதாவது தற்போதுள்ள நம் நாட்டு சூழ்நிலையில் சாப்பிட ஏதும் கிடைக்காமல் சாப்பிடாமல் உயிர் விடுபவர்களைவிட,அதிக உணவு சாப்பிட்டு அதனால் உயிர் விடுபவர்களே அதிகம்.(கொலஸ்ட்ரால்,சர்க்கரை இவை எல்லாம் அதிகம் சாப்பிடுவதால் வருபவை)

குறள் 4)

அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

முன் சாப்பிட்டது வயிற்றில் இல்லாமல் காலியாகி விட்டதை அறிந்து, பின் மிக்க பசியெடுத்த பின் உண்ணும் போது உடலுக்கு வாத,பித்த,சிலேற்பனம் முதலான முக்குற்றங்களை உண்டாக்காத மாறு பாடில்லாத உணவுகளை உண்டால் நோய் வராது.மருந்து தேவையில்லை.புரியவில்லை என்றால் கீழே உள்ள அவள் விகடனில் வெளியான கட்டுரையை படியுங்கள்.

குறள் 5)

மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி

னூறுபா டில்லை யுயிர்க்கு

மேலே சொன்ன(வளி) வாதமாகிய காற்று முதலாகியவற்றை மாறுபாடு செய்யாத உணவுகளை மட்டும் உண்டு,மாறுபாடு செய்பவைகளை மறுத்துண்டால் ஊறு பாடு என்பது உயிருக்கு வரவே வராது.இப்படி  உண்ணக் கூடியவருக்கு மருந்து என ஏதும் தேவையில்லை.

குறள் 6)

இழிவறிந் துண்பான்க னின்பம்போ நிற்கும்

கழிபே ரிரையான்க ணோய்

மிகக் குறைவாக உண்பானிடத்தில் இன்பமும் அதிகமாக உண்பவனிடத்தில் துன்பத்தை உண்டாக்கும் நோயும் நிலை பெறும்.அதாவது ஒரு பொழுதுண்பவன் யோகி.இரு பொழுதுண்பவன் போகி.மூன்று பொழுதுண்பவன் ரோகி(பெரும் வியாதியஸ்தன்).நான்கு பொழுதுண்பவன் துரோகி(தன்னுடலுக்கு துரோகம் செய்பவன்).

நன்றி :விகடன்

குறள் 7)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி

னோயள வின்றிப் படும்

வயிற்றில் இருக்கும் ஜடராக்கினியாக இருக்கும் உணவைச் செரிக்கும் தீக்குப் (நெருப்பு ) பங்கமில்லாமல்,  அதாவது அணைந்து போகுமளவிற்கு தெரியாமல் பெரிதும் உண்பவனுக்கு நோய் அளவின்றி உண்டாகும்.

குறள் 8 )

நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

வைத்தியர் தான் அறிந்த எல்லா வைத்திய சாத்திரங்களையும்,கால பேதவியல்புகளையும் அதனால் உடலில் ஏற்படும் மாறு பாடுகளையும்  வைத்து நோயின் அறிகுறிகளை அணுகி,அதன் முதலான ஆரம்பம் எதில் துவங்கியது என்று அதன் வேரோடு கெல்லி எறியும் வழியைத் தேடி அதன் வழியே சென்று நோயைப் போக்க வேண்டும்.

குறள் 9)

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்

கற்றான் கருதிச் செயல்

வைத்தியர் தான் அறிந்த எல்லா வைத்திய சாத்திரங்களையும்,கால பேதவியல்புகளையும் அதனால் உடலில் ஏற்படும் மாறு பாடுகளையும் கருத்தில் கொண்டு பிணியுற்றவனுடைய பிணியளவும்,பிணியுற்ற காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

குறள் 10)

உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்

றப்பானாற் கூற்றே மருந்து.

உற்றவனான(வைத்தியனை இங்கே நெருங்கியவன் என்ற பொருள்பட அழைக்கிறார் வள்ளுவர்) மருத்துவனிடம் வரும் நோயாளன் நான்கு விடயங்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.அவையாவன பொருளுடைமை,மருத்துவன் கூறும் வழி நிற்றல்,நோய் நிலையை உணர்ந்து உணர்த்தும் தன்மை,மருந்துத் துன்பம் பொறுத்தல் ஆகிய நான்கு குணங்கள் ஆகும்.