ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 2

அன்பான வாசக அன்பர்கள் சென்ற இடுகை ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? என்பதற்கு பல கேள்விகள் , சந்தேகங்கள் கேட்டு எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி இருந்தார்கள். எனவே அதற்கு பதிலளிக்கும் முகமாகவும் மேலும் இது பற்றி விளக்கினால் பலர் ஞானத்திற்கு இதை உபயோகிக்காவிட்டாலும் தங்கள் உடல் ரீதியான துன்பங்களையும் நோய்களையும் களைந்து கொள்ளலாம். சுத்த தேகமடையாவிட்டாலும் நோய்களை குறைத்துக் கொள்ளவோ, போக்கிக் கொள்ள இது உதவும் என்பதனாலும் இது தொடர்கிறது.

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 1 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உடல் சுத்தம் இருந்தால்தான் உடல் சுத்த தேகம் ஆகும்.சுத்த தேகம் ஞானத்தின் முதல் படிநிலை. முதலில் சுத்த தேகம் பெற என்ன செய்ய வேண்டும் என விவரிக்கிறேன்.

அகத்தியர் சொல்லும் உயிர் பற்றிய ரகசியத்தைக் கேட்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

03 AGASTIYAR-6

மேலுள்ள பாட்டைப் பாடியவர் அருட்திரு தர்ம லிங்க சுவாமிகள், அவர்கள் காக புசுண்டர் ஆசிரமம் , திருவண்ணாமலை . அவர் ஞானத்தின் சொரூபம் பல விடயங்களைத் தெரிந்த ஞானவான் . வாழும் ஞானி . சந்திக்க வாய்ப்பிருப்பவர்கள் சந்தித்து ஆசி பெறுங்கள்.ஞானமும் பெறலாம்.அற்புத சித்துக்களில் வல்லவர்.

கழிவுப் பெருக்கமே நோய் . கழிவு அகற்றலே நோய் நீக்கல் . கழிவற்ற உடலே சுத்த தேகம் . சுத்த தேகமே மனம் சுத்தமடைய வழி . சுத்த தேகமே ஞானத்திற்கு அடிப்படைத் தேவை.

இயமம் , நியமம் , அனுஷ்டானம் என்பன முதல் படித்தரங்களாக யோக சாதன முறைகளை விவரிக்கும் பதஞ்சலியின் யோக சாதன  முறைகளிலும் , நமது சித்த நெறிகளிலும் விளக்கப்பட்டுள்ளது.

இயமம் என்றால் ( இயமன் என்றால் எமன் ) எவையெல்லாம் எமன் நம்மிடம் வரக் காரணமாக உள்ள பழக்க வழக்கங்களோ , அவைகளை நாம் தவிர்க்க வேண்டும் என்பதே இயமம்.

நியமம் என்றால் ( நாமே நியமித்துக் கொள்வது ) எவையெல்லாம் உயிரை நம்முடலில் அதிக நாட்கள் தங்க வைக்க அதாவது உடம்பை வளர்த்து உயிரையும் வளர்க்க உதவுமோ அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை அல்லது விடயங்களை நியமம் என்பார்கள்.

இப்படி கூடாத பழக்க , வழக்கங்களை வாழ்க்கையில் வர வொட்டாமல் தடுப்பதுவும் ( இயமம் ) , உடலையும் உயிரையும் வளர்க்கும் பழக்க , வழக்கங்களை வாழ்க்கையில் கடைப் பிடிக்கவும் ( நியமம் ) , பழக்கத்தில் கொண்டு வருவதே அனுஷ்டானம்.

இயமத்தில் , முதலில் லாகிரி வஸ்துக்களான காபி , டீ , மூக்குப்பொடி , புகையிலை , சிகரெட்டு , பீடி , சுருட்டு , புகையிலையை வெற்றிலை பாக்குடன் போடுதல் , சாராயம் , மற்றும் சாராயம் சேர்ந்த பொருட்கள் , கஞ்சா , வெறியூட்டும் பொருட்கள் , அளவுக்கு மீறிய புணர்ச்சி ,  அதிக வேலை , அதிக உறக்கம் , வேளை தவறிய வேளையில் உறக்கம் ,  வேளை தவறிய வேளையில் சாப்பாடு , அதிகமான சாப்பாடு , அதிகமான பட்டினி இவைகளை தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளுக்கு இரு முறை மலம் கழிக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்கு இரு முறை எண்ணெய் தேய்த்து தலைமுழுகி குளிக்க வேண்டும் ( ஆண்கள் புதனும் சனியும் ,பெண்கள் செவ்வாயும் வெள்ளியும் )

மாதம் இரு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும்.( இருபத்தோரு நாட்களுக்கு மேல் சேர்த்து வைக்கப்பட்ட விந்து நோய் உண்டாக்கும். )

வருடம் இருமுறை பேதி மருந்து எடுத்து உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்.

நியமத்தில் பல விடயங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.

ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை

பற்றறு நாதன் அடியில் பணிதலால்

சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்

தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே.

 

விளங்கிடு முந்நூற்று முப்பதோடு ஒருபான்

தளங்கொள் இரட்டிய தாறு நடந்தால்

வளங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து

விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே

 

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான்விட்டு

ஞானம் தனதுரு வாகி நயந்தபின்தான்

எங்கு மாய்நெறி நின்றது தான்விட்டுமேல்

நந்தச் சூக்கம் அவைவண்ணம் மேலிட்டே

 

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்

பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்

நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்

நந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே

 

சேரும் சிவமானார் ஐம்மலம் தீர்ந்தவர்

ஒர்ஒன்றி லார் ஐம் மலஇருள் உற்றவர்

பாரின்கண் விண்நர கம்புகும் பான்மையர்

ஆருங்கண் டோ ரார் அவையருள் என்றே

 

மலக்கலப்பாலே மறைந்தது சத்தி

மலக்கலப்பாலே மறைந்தது ஞானம்

மலக்கலப்பாலே மறைந்தனன் தாணு

மலக்கலப்பு அற்றால் மதியொளியாமே.

—திரு மூலர்திரு மந்திரம் 2213 —

 

ஊற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினை

பற்றறு நாதன் அடியில் பணிதலால்

சுற்றிய பேதம் துரியம் மூன் றால்வாட்டித்

தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே

—திரு மூலர் திரு மந்திரம் 2059–

நேரா மலத்தை நீடு ஐந்து அவத்தையின்

நேரானவாறு உன்னி நீடு நனவினில்

தேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து

நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே

—திரு மூலர் திரு மந்திரம் 2166–

 

ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி இருள்போலும் ஐம்மலம் மாறுமே
                     ---திரு மூலர் திரு மந்திரம்--

இந்த ஐம்மலம் என்னென்ன என்றும் அவற்றை நீக்குதல் எப்படி என்றும் அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 3 ல் பார்க்கலாம்.