விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

இன்று விநாயகர் சதுர்த்தி.சதுரம் என்றால் நான்கு என்று பொருள்.அமாவாசையிலிருந்து நான்காம் நாளும் , பௌர்ணமியிலிருந்து நான்காம் நாளும் இந்த விநாயக சதுர்த்தி என்பது மாத சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.எல்லாவற்றுக்கும் காரணம் உண்டே,இதற்கும் உண்டு.
(ஹி,ஹி,ஒன்றுமில்லை வலைப்பூ பாதியில் விட்டுவிட்டு பிள்ளயார்பட்டி சென்றுவிட்டேன்.அதான் அறைகுறையாக நின்றுவிட்டது.மீண்டும் தொடர்கிறேன் )


ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மத்தில் தனது சொந்த வீட்டில் உச்சம் பெரும் மாதம்.(‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்’ பாடலில் கேட்டிருப்பீர்களே’ஆவணி மாதத்திலும் வரும் ஐப்பசி திங்களிலும் அன்பர் திருநாள் காணுமிடம்’).சில மூலிகைகளைப் பறிக்க ஆவணி மாதத்தில்,மூல நட்சத்திரத்துடன் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று பறித்தால்தான் அதீதமான சக்தியுடன் வேலை செய்யும்.

எனவே ஆவணி மாதத்தில் வரும் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை சதுர்த்தியில் வரும் சதுர்த்தியே விநாயக சதுர்த்தி. இந்த விநாயக சதுர்த்தியில்
கற்பகமாம் கணபதியைக் கைதொழ மனக் கவலைகள், உடற் கவலைகள், சுற்றம் பற்றிய கவலைகள் தீரும். எப்படி என்று பார்ப்போம்.
வான வெளியில் இயங்கும் கோள்களுக்கும் மனித உடல் இயக்கத்திற்கும் தொடர்பு உண்டு.பேரண்டத்தில்( )ஏற்படும் மாற்றம் ஒவ்வொன்றும் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.இதை அடிப்படையாக வைத்தே நமது சோதிடக் கலை உருவாகி உள்ளது.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
(சட்டை முனி ஞானம்)

ஒருமுறை விநாயகர் அக்கினி ரூபமான அசுரனை விழுங்கிவிட அதன் விளைவாக அவர் உடல் வெப்ப மயமாகி அவர் உடலில் அடங்கியுள்ள அண்ட பேரண்டங்களும் உஷ்ணமாகி கொதித்தது.அப்போது குளிர்ச்சி நிரம்பியுள்ள அருகம் புல்லால் அர்ச்சிக்க அவர் உடல் குளிர்ந்து அண்ட பேரண்டங்களும் குளிர்ந்தது.எனவேதான் விநாயகருக்கு அருகம் புல் அர்ச்சிக்க உகந்ததாக ஆனது.

கொஞ்சம் நன்றாக விளக்குவோம்.விநாயகர் யானை வடிவாகவே படைக்கப்பட்டுள்ளார். அதாவது அந்தக் கரணங்கள் 4 .மனம்,புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவே அவை.விநாயகர் தன் மனைவிகளானசித்தி,புத்தி களுடன் காட்சி தருகிறார் (விநாயகர் = மனம்+அகங்காரம்,சித்தி=சித்தம்,புத்தி=புத்தி) .

மனமே யானை.யானை தன் துதிக்கையை ஓயாமல் அசைத்துக் கொண்டும்,உடலைஅசைத்துக் கொண்டேஇருப்பது போல இறந்த காலத்தில் நடந்த விஷயங்களையோ,எதிர் காலத்தில் நமக்குப் பிடித்ததாக நடக்கப் போவதாக நினைக்கும் விஷயங்களையே அசை போட்டுக் கொண்டே இருக்கும்.அல்லது நமக்குப் பிடித்ததாக நடந்த விஷயங்களை இனி நடக்கப் போவதாக நினைத்துப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டே இருக்கும்.
நிகழ் காலத்தில் உள்ள எதையும் நின்று முழு மனதுடன் அனுபவிக்காது.

 அதையே சித்தர்கள்’மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு மனிதனுக்கு அவ்வளவு தெரியாதப்பா’ என்று கூறுகிறார்கள். இதையே ஜென் புத்த மதக் கருத்துக்களில் ‘இந்தக் கணத்தை முக்கியமானதாகக் கருதி அனுபவி வேறு தியானம் தேவையில்லை’என்று கூறுகிறது.அதாவது நிகழ்காலத்தில் நினைக்கையில் மனம் தன் காலத்தின், முன்னும் ,பின்னும் அலையும் அலைவை நிறுத்தி செயல் இழந்துவிடும்.

நாம் தியானம் செய்வதே அலையும்,அல்லல் கொடுக்கும் மனத்தை அடக்கவே!
அதையே இப்படி எளிதாகவே அடக்கலாம் என்றால் இதையே செய்யலாமே!புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும்(படிப்பறிவு,பட்டறிவு, அனுபவ அறிவு என்ற மூன்று அறிவுகளின் மூலம் திரட்டப்பட்டிருக்கும் அறிவை (நிலை அறிவகம் (MAIN  MEMORY )),ஒப்பிட்டுப் பார்த்து செயல்படும் செயல்பாட்டுக் கருவியே( PROCESSOR ) மனம்.
சிலர் தாரணையையே தியானம் என்று சொல்லித் தருகின்றனர். அது மிகத் தவறானது.

சித்தம் (MAIN PROGRAM) ஆன்மாவின் முக்கிய கருவி .சித்தத்தின் மூலம் செயலாற்றுபவர்கள் சித்தர்கள்.சித்தத்தின் கருவியே மனம்.அகங்காரம் என்பது தான் என்பதை உணர்தலே.தான் என்பதை உணர்ந்தாலே காரியம் ஆற்றத்தொடங்குகிறோம்.காரியம் ஆற்றும் எண்ணம் சித்தத்தில் உருவாகி மனத்தின் மூலம் புலன்களை கருவிகளாக்கி செயல்படத்துவங்குகிறது.

இதன் மூலம் இருவினைகளாகிய(நல்வினை,தீவினை) களைச் செய்து,வினைப் பயன்களின் பயன்களை அனுபவிக்கத் தொடங்குகிறது ஆன்மா.ஆனால் இறைவனோ இரு வினைகளும் சேராதவனாக இருந்து கொண்டு நல்வினை,தீ வினைப்பயன்களை உயிர்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறான்.
 
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்;-பொருள்சேர்
புகழ் புரிந்தார் மாட்டு.(திருக்குறள்)

ஆன்மா நல்வினை செய்தால் நற்பிற்வி எடுத்தும்,தீவினைகள் செய்தால் தாழ்வான பிறவிகள் எடுத்து தீப்பிறவிகளாகவும் பிறவி மேல்,பிறவி எடுத்து இந்தப் பிறவிச் சுழலில் இருந்து விடுபடும் வகையறியாது திகைத்து கேவல நிலையில் இருக்கிறது.

எங்கேயிருந்து வந்தோம்,என்னவாக இருந்தோம்,என்னவாக மாறப் போகிறோம் என்பதேதும் தெரியாத நிலையில் சீரழிகிறது.இங்கே ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நல்வினை,தீ வினை, இரண்டுமே பிறவிக்கு காரணமாக அமைவதால் இவ்விரண்டு வினைகளையும் இருள் சேர்ந்த வினைகள் என்கிறார் வள்ளுவர்.

நாம் இதுவரை நன்மை செய்ததால் நன்மை விளையும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.ஆனால் இது என்ன புதுமையாக இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.இந்த இரு வினைகளை மூட்டையாக கட்டி இறைவன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்தால்தான் இந்தச் சுழலில் இருந்து விடுபட முடியும்.

இருமுடி கட்டி அய்யப்பன் கோவிலுக்கு கொண்டு போய் இருமுடியை அய்யப்பன்( இறைவன் ) காலடியில் கொண்டு போய் சமர்பிப்பது இதை குறிப்பிடவே . இருமுடியை கீழே வைக்கக் கூடாது என்று குரு சாமிகள் கூறுவார்கள். அதாவது இருவினைப் பயன் நம்மை விட்டு எப்போதும் நீங்காமல் (கீழே வைக்க முடியாமலேதான் இருக்கிறது) என்பதையே அப்படி சொல்கிறார்கள்.பின் எப்படி, என்ன செய்தால் இந்த சுழலில் இருந்து மீள்வது என்று நீங்கள் கேட்பதும் எனக்குக் கேட்கிறது.வலைப் பூவை தொடர்ந்து பாருங்கள்.விடை கிடைக்கும்.

நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்