காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்

காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள் பற்றி இப்போது பார்ப்போம்.
காப்பி,டீ இவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குப் பின்தான் அதிகமாக நமது பழக்க,வழக்கத்தோடு கலந்து நமக்கு கேடு விளைவித்து வருகின்றன. இவை நம் உடலின் பித்தத்தை அதிகரிப்பவை.


பித்தம் என்றால் வெப்பம்,நம் உடலில் உள்ள வெப்பத்தை அதிகரிக்க இங்கிலாந்தில் உபயோகித்தார்கள்.அங்கு குளிர் அதிகம்.அது சீதள நாடு எனவே காப்பி,டீ,ஆல்கஹாலிக் குடிபானங்களாக உபயோகித்து உடல் வெப்பத்தை அதிகரித்துக் கொண்டார்கள்.


நம் நாடோ வெப்ப மண்டலப் பிரதேசத்தில் உள்ள நாடு.இங்கும் இதே போன்ற பானங்களை நாம் குடிக்க,குடிக்க அவை நம் உடலில் ஏற்படுத்தும் கேடுகள் பற்றி பார்ப்போம்.


நம் உடலில் மூன்று குழிகள் உள்ளது.தலை ஒரு குழி,மார்பு ஒரு குழி,வயிறு ஒரு குழி. இந்த மூன்று குழியில் நிலவும் வெப்பம் சமனப்பட சித்த வைத்திய தத்துவத்தின்படி தச வாயுக்களில் ஒன்றான சமானன் பணி புரிகின்றது.அக்கு பஞ்சரில் இதை முக்குழி வெப்பப் பாதை என ஒரு உறுப்பாக ஏற்படுத்தி இருக்கின்றனர்.அவ்வளவு முக்கியம் இந்த முக்குழி வெப்பம்.அவற்றில் உள்ள வெப்பம் உடல் அமைப்பிலேயே தனித் தனியாக தடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது.


அந்த முக்குழி வெப்பப் பாதையில் முக்கிய இரு குழிகள் வயிறு மற்றும் மார்பு.மார்பு வெப்பத்தை மூச்சுக்காற்றான பிராணன் ஆற்றி கட்டுக்குள் வைத்துள்ளது.ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு வீதம்,ஒரு (24 நிமிஷம்)நாளிகைக்கு 360 மூச்சுக்கள்(ஒரு வட்டத்திற்கு 360 பாகை என்பதை நினைவில் கொள்ளவும்.அந்த நேரத்துக்குள் நவ கிரகங்களின் பாய்ச்சல் ஒரு சுற்று முடிந்துவிடும்),ஒரு ஹோரைக்கு(ஒரு மணி நேரம்) 2 1/2 நாழிகைக்கு 900 மூச்சுக்கள்(9 ன் மடங்காக வருவதைக் கவனிக்கவும்) ,ஒரு நாளில் 15 X 60 X 24 =21,600 மூச்சுக்கள்(216 உயிர் மெய் எழுத்துக்கள் இந்த ஒரு நாள் மூச்சுக்களை குறிப்பவையே)


அடுத்தது வயிற்றில் ஜடராக்கினி நாம் உண்ணும் உணவை சீரணம் செய்து உணவை அன்னரசமாகவும்,அதன் பின் சப்த தாதுக்களாகவும், மாற்றுகிறது. இதற்கு ஜடராக்கினி அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடாது.ஏனெனில் 
‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலாய் எண்ணிய மூன்று’.
இந்த ஜடராக்கினி மழை மற்றும்,பனிக்காலத்தில் குறைவுபடுவதால் வானம் மப்பும் மந்தாரமாக ஆவது போல் வயிறும் மப்பும் மந்தாரமாக ஆகிவிடும்.அப்போது சீரண சக்தி குறைவுபடும்,இது ஜடராக்கினி குறைபடுதலால் ஏற்படுவது , டீ ,ஆல்கஹாலிக் குடிபானங்கள் மற்றும் காப்பி குடிப்பதால் வயிற்றில் உள்ள ஜடராக்கினி அதிகப்பட்டு, அதன் விளைவாக பித்தம் கதித்து, பித்தம் தலைக்கேறி தலை அதிக சூடாகிறது.


பித்தம் தலைக்கேறினால் சித்தமும் கலங்கும் என்பது சித்தர் மொழி.தற்போது இந்தப் பித்தக் கதிப்பால்தான் இரத்தக் கொதிப்பு,அதன் விளைவாக மூளை சூடாகிறது.மூளையின் மொத்த செயல்பாடும் இதனால் பாதிக்கப்படுகிறது.இந்த பித்தத்தை தலைக்கேற விடாமல் நம் முன்னோர்கள் காலையில் நீராகாரம் என்னும் பழைய சோற்று நீரை பருகி வந்துள்ளார்கள்.


ஆற்றுநீர் வாதம் போக்கும்,
அருவி நீர் பித்தம் போக்கும்,
சோற்றுநீர் இரண்டும் போக்கும்.


முக்குழி வெப்பப்பாதையில் ஏற்படும் வாத ,பித்த சம நிலைப்படுத்த நீராகாரம் அமிர்தத்தைவிட மிகவும் நல்லது.இத்துடன் சீரகம்(சீர் + அகம்),வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்து சாப்பிட மிக நன்று.


வெங்காயம், சீரகம், வெந்தயம் ஆகிய அந்தக் காலத்து அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களே(இந்தக் காலத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்,ஆண்களுக்கும் அஞ்சறைப் பெட்டி தெரியுமா?
இதையே கவி காளமேகம் இரட்டை அர்த்தமான சிலேடையில் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.


வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன 
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை;- மங்காத
சீரகத்தை தந்தீரீல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டி யாரே.


வெம்மையான காயம் ( உடம்பு ),சுக்குப் போல இறுகிவிட்டால் ,வெந்த அயமான((வெந்த+அயம்)அயச் செந்தூரம் போன்ற ) மருந்துகளால் என்ன பயன்,இங்கே யார் சுமந்து இருப்பார் இந்த உடலை.மங்காத சீர் அகத்தை(சீரான மனத்தை) தந்தீரில் தேட மாட்டேன் இப் பெரும் காயம்(பெரிய உடம்பை),ஏரகத்துச் செட்டியாரே என்றால் திருவேரகம் என்னும் இடத்தில் அமர்ந்து இருக்கும் முருகனே! என்று பொருள்படும்.
  
தலையில் உள்ள மூளைக்கு குளிர்ச்சியாக வைக்க இதயத்தில் இருந்து அழுத்தி வெளியேற்றும் இரத்தத்தில் 80 முதல் 90 சதவிகித இரத்தம் தலைக்கு பாய்கிறது.ஒரு சிலிகான் சில்லில் வேலை செய்யும் போது எவ்வளவு சூடாகிறது.அதற்கு சூடாகாமல் இருக்கவும் ,அதற்கு எவ்வளவு குளிர்ச்சியூட்ட குளிர் சாதனங்கள்,காற்றாடி போன்றவற்றை வைத்திருக்கிறோம் .


அதைப்போல பல்லாயிரம் மடங்கு வேலை செய்யும் மூளை உள்ளே உள்ள தலைக்கு மிக்க குளிர்ச்சியாக இருக்க என்ன செய்து வந்துள்ளோம். யோசியுங்கள்! கரிசலாங்கண்ணி, பொன்னாங் கண்ணித்தைலம் இவற்றை தலைக்குத் தேய்ப்பதனாலும் , கீரையாக உள்ளுக்கு சாப்பிடுவதனாலும் தலையைக் குளிர்ச்சியாக வைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா?


சோழர்கள் காலத்தில் பொன்னாங்கண்ணி,கரிசலாங்கண்ணி, போன்றவற்றை உபயோகிக்க கண்ணிக்காணம் என்ற வரியை விதித்து உள்ளார்கள்.அந்த வரியையும் செலுத்தி இந்த பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணியை உபயோகித்து வந்துள்ளார்கள்,என்றால் பழந்தமிழர் எவ்வளவு புத்திசாலிகள். இன்று அதே  பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணியை எந்த வரியும் இல்லாமல் இலவசமாக கிடைக்கிறதே,அதை உபயோகிக்காமல் இருக்கிறோமே அது ஏன்?


நம் அறியாமையை என்னென்று சொல்வது.கண்ணி என்றாலே கண்ணுக்குகந்தது என்று பொருள்படும்.கண்ணோ பொன்னோ என்பார்கள்.கண் குளிர்ச்சியாக இருந்தாலே தலை குளிர்ச்சியாக இருக்கிறது என்று பொருள்.கண் எரிச்சல் என்பது பெரும்பாலான இன்றைய மக்களிடையே உள்ள பிரச்சினை.பல சிறு குழந்தைகள் நம் பழந்தமிழர் வாழ்க்கை முறையை பெற்றோரும் அறியாததால் பெரிய சோடா புட்டிக் கண்ணாடிகளுடன் வலம் வருகின்றன.


நான் தொழிற் பழகுனராக ஒரு ஆலையில் பணி ஆற்றும் போது வெல்டிங் வேலை செய்யும் போது கண் பழுதானதால்,இது போன்ற கண்ணாடியை   அணியும் கேவல நிலையில் இருந்து விடுபட்டு ,தற்போது 45 வயது முடிந்தாலும் வெள்ளெழுத்துக் (சாளேச்சுரம்) கண்ணாடி கூட அணியாமல் இன்று வரை இருக்கிறேனென்றால் எதை உங்களுக்குச் சொல்கிறேனோ அதை நான் செய்து வந்ததனால்தான்.


இனி மேலும் பல அனுபவ வாழ்வியல் கட்டுரைகள் வெளிவரும்.படித்து வாழ்வில் பயன் பெறுங்கள்.


கேட்க யாரும் இல்லை என்றால் என்னால்தான் சொல்ல முடியுமா?
கேட்பதற்கு வந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.சொல்ல வைப்பதுவும் விதியே! கேட்க வைப்பதுவும் விதியே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது வேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!


சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல இடம் அதிகம் எடுத்தால் படிப்பவர்க்கு சலிப்பு தட்டும் எனவே,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாருங்கள்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்