காய்ச்சல், கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்,வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி

இப்போது மழைக் காலம்,வெப்பமும் ஈரப்பதமும் ஒரு சேர இருந்தால் அங்கே கிருமிகள் தழைத்துப் பெருகும். 
ஆங்கில மருத்துவர்களுக்கும் கொண்டாட்டமான காலம்.ஏனெனில் காய்ச்சல் கண்வலி சீசன்.ஆங்கில மருத்துவர்களுக்கும் வசூல் மழை பொழியும்.காரணம் கீழே.

நன்றி தினமலர்.
பதிவுக்கு போகும் முன் இந்த உரத்த சிந்தனை தினமலர் 24-10-2010 ல் வெளியானது.கொஞ்சம் படித்துவிட்டு மேலே தொடருங்கள்.திரு தே.மா.முகுந்தன்,சிந்தனையாளர் அவர்களுக்கு நன்றியும் தெரிவியுங்கள்.


நிலவேம்புக் குடிநீர் என்ற ஒன்று சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அதை முடிந்தால் நான்கைந்து பாக்கெட்டுகள் வாங்கி வைத்துக் கொள்ளவும்.அதைக் கஷாயமிட்டு(முடிந்தால் அத்துடன்,குப்பை மேனி,விஷ்ணு கரந்தை,வெள்ளருகு,கிரந்தி நாயகம்,ஆடா தொடை சேர்த்தால் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் மூன்றே நாட்கள்தான்,விருந்தும் மருந்தும் மூன்று நாளே!ஒரு விஷயத்தில் கவனம் தேவை.பூச்சி மருந்து அடித்த வயல் பக்கம் இருக்கும் மூலிகைகளை எடுக்காதீர்கள்,எடுத்த மூலிகைகளை நன்றாக சுத்தமான நீரில் கழுவிய பின் உபயோகிக்கவும்) அருந்தினால் காய்ச்சல் பறந்து போகும்.


புகை போட மேலே கண்ட நிலவேம்புக் குடிநீருக்கான பொடி, சதகுப்பை,வெண்குங்கிலியம் (கோயில்களில் முன்பு இதைத்தான் புகை போட உபயோகிப்பார்கள்,குங்கிலியக் கலய நாயனார் என்றும் ஒரு நாயனாரே உண்டு),சிங்கப்பூர் சாம்பிராணி என்று கேட்டு வாங்குங்கள்,(கடையில் இப்போது சாம்பிராணி என்ற பெயரில் விற்பது பென்சாயின்),இத்துடன் அகில் கட்டைப் பொடி,சந்தனத்தூள் சேர்த்து புகை போட்டு வர வீட்டில் உள்ள கெட்ட கிருமிகள் மட்டும் அழிந்து,(கவனிக்கவும் நன்மை புரியும் கிருமிகள் அழிவதில்லை) நம் நோய் எதிர்ப்பு சக்தியும் வளரும்.
காய்ச்சல் அதிகம் இருந்தால் நிலவேம்புக் குடிநீருக்கான பொடி, சதகுப்பை,குப்பை மேனி, வேப்பிலை,எலுமிச்சை இலை,தும்பைச் செடி,விஷ்ணு கரந்தை,வெள்ளருகு,கிரந்தி நாயகம்,தைவேளை(நல்வேளை) ,ஆடா தொடை, இவற்றில் கிடைத்தவற்றைப் போட்டு தண்ணீரில் பானையை மூடி கொதிக்கவிட்டு,ஒன்று அல்லது இரண்டு போர்வையை இடைவெளி இல்லாமல் நோயாளர் மூடிக் கொண்டு அந்தப் பானையையும் உடன் உள்ளே வைத்துக் கொண்டு ஆவி பிடிக்கவும்.சூடு குறைந்தால் நான்கைந்து செங்கற் துண்டுகளை அடுப்பில் சிவக்க காயவிட்டு அந்தப் பானையில் ஒன்றன் பின் ஒன்றாக கரண்டியால் முகத்தில் வெந்நீர் தெரிக்காமல் போடவும்.நன்கு வியர்த்து காய்ச்சல் உடனே குறையும்.


மேற்கண்ட மூலிகைகள் தெரியாது என்னும் அன்பர்கள் எனது அடுத்த பதிவான காய்ச்சல்,கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2) என்ற பதிவைப் பார்க்கவும்.


அடுத்ததாக கண்வலிக்கு இந்தப் புகையே கண்வலி பரவாமல் தடுக்கும்.கண்வலி வந்தால் இம்காப்ஸ் மருந்துகளில் பன்னீர்(ரோஸ் வாட்டர்),படிகார நீர் கிடைக்கும்.படிகார நீர் 2 பங்கும்,பன்னீர் 3 பங்கும் சேர்த்து கண்ணிற்கு விட்டு வர கண்வலி நீங்கும்.

சாதாரண நாளிலும் வெறும் ரோஸ் வாட்டரை மட்டும் விட்டு,பஞ்சில் நனைத்து கண்ணின் மேலே வைத்து வர கண் குளிர்ச்சியாகும்.இதிலும் ஒரு எச்சரிக்கை நான் கூறியது மெடிசினல் உபயோகத்திற்கான பன்னீர் இதைத்தான் உபயோகிக்க வேண்டும்.கடைகளில் பன்னீர் என்ற பெயரில் விற்கும் சாதாரண பன்னீரைப் பயன்படுத்திவிட வேண்டாம். 
    
கொள்ளை நோயின் தூதுவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க மேன்மேலும் வழிகள் தரப்படும்.



மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்