ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 3

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 2 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐம்மலம் என்று சொல்வது மனம் சார்ந்த மலம் ஐந்து , உடல் சார்ந்த மலம் ஐந்து எனக்கூறுவார்கள்.

மனமலம் ஐந்தாவது ஆணவம் , கன்மம் , மாயை , வைந்தவம் , திரோபவம் , ஆகியன.ஆணவம் , கன்மம் ,  மாயை என மும்மலமாகவும் கூறுவார்கள்.

உடல் மலம் ஐந்தை விளக்குகிறேன். மார்புக்கு   மேலே வெள்ளை மலம் உள்ளது . மார்புக்கு   கீழே மஞ்சள் மலம் உள்ளது. பொதுவாக உடலில் உள்ள மலம் ஐந்தாகக் கூறுவார்கள். காதில் உள்ள காதுக் குறும்பி காதில் உள்ள மலம் . கண்ணில் உள்ள மலம் பீழை .மூக்கில் உள்ள மலம் சளி .குதத்தில் உள்ள மலம் , மலம் என்று பொதுவில் அழைக்கப்படுகிறது.இது போக விந்துவும் மலமென்றே அழைக்கப்படுகிறது.

மார்புக்கு  மேலே வெள்ளை மலம் உள்ளது .இதை மூக்குச் சளி .தொண்டைச் சளி , நெஞ்சுச் சளி , மார்புச் சளி , மண்டைச் சளி என்றும் , இருக்கும் இடத்தை வைத்து பெயரிட்டு அழைக்கிறோம்.

இதுவே நாம் இறக்கும் நேரம் கழுத்தில் வந்து அடைத்து உயிரைக் கொல்கிறது. கழுத்தில் உள்ள விசுத்தி சக்கரத்தில் உள்ள ருத்திரன் ,ருத்திரி ஆகிய ஆதார சக்கர தேவதைகள் , இந்த தொண்டையில்  சேரும் சளியின் உதவியினால் மூச்சை நிறுத்தி , காற்று நின்றதனால்  உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு ஆகாயத்துடன் உயிரைப் பிரிக்கும் காரியத்தை நடத்துகிறார்கள்.

இந்த ஐம்மலமே உடலை அறிவில்லாததாக ஆக்குகிறது. மல நீக்கமே , கழிவு நீக்கமே ஆரோக்கியம் . கழிவுகளின் தேக்கமே ஆரோக்கியக் குறைவு . அதுவே நோய்.அதுவே குணக் கேடையும் அளிக்கிறது.

பொதுவாக புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு வருபவர்கள்  அதிக சுய நலம் மிக்கவர்களாகவும் ,  உடன் இருப்பவர்கள் இவர்களுக்கு அதிகம் சேவை புரிந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் , அவர்கள் மனம் நோகும்படி செய்வதும் , திட்டுவதும் , சில சமயம்  அடிப்பதும் கூட கண்டிருக்கிறேன். சில சமயம் விரோத மனோபாவம் பாராட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

இது போல நடந்து கொள்வது வியாதியின் கஷ்டத்தினால் செய்வதாகக் கொண்டாலும், இந்த வியாதிகள் வருமுன்னரும் இதே போலவே இருந்து வந்துள்ளது  அவர்கள் உடன் வரும் நபர்கள் மூலம் தெரிய வருகிறது . மருந்தின் மேன்மையால் வியாதி குணமானாலும் அவர்கள் குணக்கேட்டில் எந்த  மாற்றமும் ஏற்படவில்லை என்றால் வியாதி மீண்டும் திரும்பும்.

இதை ஹோமியோபதியில் சோரா , சிபிலிஸ் , சைக்கோசிஸ் என்று மன ரீதியாக வகுத்துக் கூறுவார்கள்.சோரா என்பது மனத்தில் வியாதி விதை ரூபத்தில் உள்ள நிலை. சிபிலிஸ் என்பது மனத்திலிருந்து விதைகள் முளைத்து உடலுக்கு வரும் நிலை, சைக்கோஸிஸ் என்பது உடலில் வியாதி கிளைத்து எழுந்த நிலை. மனத்திலிருந்து விதையை அழிக்காத வரை வியாதியும் அழிவதில்லை ( உடலில் இருந்து நீங்கினாலும் )

மலமே குணக் கேட்டிற்கு காரணமாகிறது .குணக்கேடு வியாதிக்குக் காரணமாக அமைகிறது.குணமேன்மை வியாதிகளில் இருந்து விடுதலை . குணமேன்மைக்கு மல ( கழிவு ) நீக்கம் அவசியம் . இதையே பதஞ்சலி முனிவரின் யோக சாதன முறைகள் வலியுறுத்துகிறது.

அவை

1 ) தௌத்தி ( தொண்டை சுத்தி , எண்ணெய் கொப்பளித்தல்)

2 )பஸ்தி  (பெருங்குடல் , கீழ்க்குடல்   மல நீக்கம்  { எனிமா })

3) நேத்தி (ஜல நேத்தி , சூத்திர நேத்தி )

4)திராடகம் ( பயிற்சி மூலம் கண்ணிலிருக்கும் கழிவகற்றம்  )

5)நௌலி ( வயிற்றுப் பயிற்சி )

6) கபாலபதி ( உதர விதான மூச்சுப் பயிற்சி )

எண்ணெய் கொப்பளித்தல்

எண்ணெய் கொப்பளித்தலின் மூலம் உடலில் உள்ள கழிவுகள் வாயில் இழுக்கப்பட்டு எண்ணெயில் விழுந்து வெளியேற்றப்படுகின்றன. வாயில் பத்து அல்லது இருபது மில்லி நல்லெண்ணெய் அல்லது தாவர எண்ணெய்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது பலவற்றைக் கலந்தோ ஊற்றி 20 நிமிடத்துக்குக் குறையாமல் வாயில் வைத்து கொப்பளித்து ஒரு சொட்டைக் கூட விழுங்காமல் துப்பிவிட வேண்டும்.இதில் சகல கிருமிகளும் உடலில் இருந்து நீக்கமாகும்.உடலில் உள்ள கழிவுகளும் நீங்கும்.

( டான்சிலிடிஸ் ) தொண்டைச் சதை வளர்ந்த  நோயாளிகள் இதை செய்ய உடனே பலன் கிட்டும்.ஏனெனில் கிருமிகளின் பெருக்கமே தொண்டைச் சதை அழற்சியாக காரணம்.தொண்டைச் சதை வளர்ச்சிக்கு  இந்தச் சதையையே அலோபதி வைத்தியத்தில் வெட்டி எறிந்துவிடுவார்கள்.திருடன் உள்ளே நுழைய முயற்சிக்கும் போது  வாயிற் கதவுகளை சேதப்படுத்தத்தான் செய்வான் .

அதற்காக சேதமான வாயிற் கதவையே   ( தொண்டைச் சதைகள் அப்படிப்பட்ட உடலின் வாயிற் கதவுகள் ) வெட்டி எறிந்துவிட்டால் திருடன் சர்வ சாதாரணமாக உள்ளே நுழைந்துவிட மாட்டானா ???? என்ன அற்புதமான  (அற்பமான )  அறுவை சிகிச்சை ???? என்ன அற்புதமான (அற்பமான ) புத்தி  ???? தற்போது ஒரு ஆறுதலான விடயம் தொண்டைச் சதை அறுவை செய்பவர்கள் பின்னாளில் ஆஸ்துமா நோயாளிகளாக ஆவதாக கண்டு பிடித்து விட்டதனால்!!!!இப்போது  இந்த அறுவை சிகிச்சையை அதிகம் செய்வதில்லை. ( அப்பாடியோவ் ஒரு வழியா விட்டுட்டாங்க!!!  )

இந்த எண்ணெய் கொப்பளித்தல் சகல வியாதிகளுக்கும் சிகிச்சையாக பயன்படுத்தலாம்.மேலும் வியாதிகள் அணுகாவண்ணம் காத்துக் கொள்ளலாம் என நோயணுகா விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவேதான் எள் + நெய் = எண்ணெய் ஆனதை நல்ல என்ற அடைமொழியோடு நல்ல எள் நெய் என்று குறிக்கும் விதமாக நல்லெண்ணெய் என்று குணபாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போக தொண்டை சுத்தியில் வயிற்றில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றும் முகமாக , வஜ்ராசனத்தில் அமர்ந்து கொண்டு எதிரே உள்ள மெழுகுவர்த்தியை ஊதி  அணைப்பது போல வாயை குவித்துக் கொண்டு , கைகளில்  கட்டை விரலை இருதய ரேகையில் வைத்து பின்னால் நீட்டி வைத்துக் கொண்டு நேரான நிலையில் இருந்து வயிறு மடியும் வண்ணம் உடலை கீழே கொண்டு வரும்போதே காற்றை குவிந்த வாயின் வழி விரைவாக ஊத  வேண்டும் .இது தவுத்தி என்றழைக்கப்படும்.வயிற்றில் இருந்து வெளியேறும் கரியமில வாயு தொண்டையை சுத்தம் செய்து வெளியேறும் .

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 4 ல் பார்க்கலாம்.